Velupillai Priraphakaran

  • தமிழீழ விடுதலைப் புலிகள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.

இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் ‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார்.

தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.

(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.
(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.
(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.

1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.
1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.

1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.

1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் ஜே .ஆர். ஜெயவர்த்தனா அரசு ‘புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.

1979 ஆடி 20ம் நாள் ஜே .ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.
இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (ஜே .ஆர். மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் ஜே .ஆர். ஜெயவர்த்தன.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.

இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே  புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.

இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.

Leave A Comment