Velupillai Priraphakaran

நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம் மிகவும் தொன்மை வாய்ந்த இனம் தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்.


போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.
எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.


பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.


எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கிறன. சோதனைமேற் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்கமுடியாத துயரச்சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.


தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.


சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. எம்மக்கள்
துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.


தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம்.

Leave A Comment