Velupillai Priraphakaran

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.


எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும்விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதான வழிமுறை தழுவி, அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதுமில்லை.


போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமோ அந்தப் போராட்டடச் சக்தியை அந்நியப்படுத்தி அழித்துவிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப்போவதில்லை. இது சிங்களஆட்சியாளர்களின் அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.


எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.


சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லைகவலை கூடத் தெரிவிக்கவில்லை.


தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

Leave A Comment