Velupillai Priraphakaran

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.


தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ்அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.
அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.


சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.


உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.


எமது வீரவிடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டுநிற்கிறோம்.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து
நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

Leave A Comment