Velupillai Priraphakaran

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து,வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.


எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.


மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.


சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண் பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.


இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக,கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

Leave A Comment